பகுதி - 2
பழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்து விட்டேன்! மன்னியுங்கள்! மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம்!
காலைச் சிற்றுண்டி முடிந்தது. எனது ஞானத் தந்தை, முதல்வர், பேராசிரியர், தி.தனக்கோடி அவர்களைப் போய்ப் பார்த்தேன். இருவரும் வாடிக்குப் போனோம். அங்கு எனக்கு இரண்டாவது வியப்புக் காத்திருந்தது! “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி?”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம்! எனைவிட பதின் மூன்று வயது மூத்தவர், என்றாலும் என்னினும் இளமையாகத் துறு துறு என்று இருந்தார், கல்லூரி நிர்வாகி!
மாலையில் கல்லூரியைப் போய்ப் பார்த்தேன். ‘ஊர்தான் மோசம்; கலூரிக் கட்டிடம் அடுக்கு மாளிகையாக இருக்கும்’ என்று கற்பனைக் காற்றில் கட்டிய கோட்டை இடிந்து விழுந்தது! “இதுவா கல்லூரி?” என்று மூன்றாவது வியப்பு ஏற்பட்டது! அகழ்வாராய்ச்சி நடந்த இடம் போல் காட்சி தந்தது! கல்லூரி முற்றமும் கல்லூரிக் கட்டிடத்தின் நீண்ட கூடங்களும் தாழ்வாராமும் ஒரு சத்திரத்தை நினைவூட்டின!
முப்பது ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தையும் காதிர் முகைதீன் கல்லூரியையும் கண்ணால் கண்டவர்கள்தான், கல்வித் தந்தை S.M.S. ஷேக் ஜலாலுதீன் அரும் பாடுபட்டு செங்கல் செங்கலாகக் கல்லூரியை வளர்த்ததையும், கல்லூரியால் ஊர் முன்னேறியதையும் செம்மையாகப் புரிந்து கொள்ள முடியும்.
அரச மரத்தைப் பிடித்த சனி, பிள்ளையாரையும் பிடித்ததாம்! அது போல ஊரின் வசதிக் குறைவு, ஊரின் வளர்ச்சியையும் பாதித்துடன் கல்லூரியின் வளர்ச்சியையும் பாதித்தது! அதிரை நகரம் மற்றும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படித்த பள்ளி மாணவர்களின் மேற் படிப்புக்காகவே கல்லூரி துவக்கப் பட்டது. ஆனால் பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் நிறைய மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும், கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் நெய்யைத் தேடி அலைந்தார்கள்! வெளியூர் சென்று படிக்க வசதியற்ற ஏழை வீட்டுப் பிள்ளைகளும், பல முறை படை எடுத்தும் குறைந்த மதிப்பெண்களே பெற்ற மாணவர்களுமே காதிர் முகைதீன் கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள்! அப்படிச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருந்தது!
நான் பணியாற்றத் தொடங்கிய 1957 –ஆம் ஆண்டில் மாணவர் எண்ணிக்கை 80 – க்கும் குறைவே! ஆசிரியர்கள் எண்ணிக்கையோ 16 – க்கும் மேலே! மாணவர் குறைவுக்கு, வசதியற்ற சூழல் காரணம் என்பார் முதல்வர் தனக்கோடி!
வேலை தேடி வந்த ஆசிரியப் பெருமக்கள் சிலர், ஊரைப் பார்த்ததும், “வேலையே வேண்டாம்” என்று சொல்லி ஓட்டம் பிடித்ததும் உண்டு! வேலையில் சேர்ந்தவர்களும், வேறு ஊர்களில் வேலைக்கு முயற்சி செய்த வண்ணம் இருப்பார்கள்! கல்லூரி எந்த நேரத்திலும் மூடப்படலாம் என்ற அச்சம் வேறு அவர்களுக்கு!
எவ்வளவோ பணத் தட்டுப்பாடும் சிரமங்களும் பேரலைகளாக மோதிய போதிலும், எதிர் நீச்சல் போட்டுச் சமாளித்தாரே தவிர எக் காரணத்தைக் கொண்டும் கல்லூரியை மூடும் எண்ணம் தாளாளருக்குத் தோன்றியதே இல்லை! பட்டப் படிப்பு எதையாவது மூடலாம் என்று முதல்வர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் தாளாளர் அப்படி நினைத்ததில்லை!
அதே சமயத்தில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தத் தாளாளர் பெரும் முயற்சி செய்தார்! அவர் அனுப்பி வைத்த ஆசிரியர்கள் பல ஊர்களுக்குச் சென்று, மாணவர்களை வலை வீசிப் பிடித்து வந்தார்கள்! பக்கத்து ஊர்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைக் கண்டு பேசத் தகுந்தோரை அனுப்பினார். தலைமை ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களுக்கு, காதிர் முகைதீன் கல்லூரியைப் பரிந்துரை செய்தார்கள். பல்கலைக் கழகத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற வெற்றி விழுக்காடுகள் செய்தித் தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டன 1962 - ல் மாணவர்கள் எண்ணிக்கை 320 ஆயிற்று!
கல்லூரியின் தொடக்க ஆண்டுகளில் நிதிப் பற்றாக் குறையால் ஆசிரியப் பெரு மக்களும் மாணவ மணிகளும் பல சிரமங்களுக்கு ஆளாயினர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆசிரியர்களுக்கு மாதா மாதம் முதல் தேதி அன்றே ஊதியம் கிடைத்ததில்லை! ஆனால் அரசு மானியமோ, அறுவடைப் பணமோ, பிற வருவாயோ எது கிடைத்தாலும் முதல் வேலையாக, பைசா பாக்கி இல்லாமல் முழு ஊதியத்தையும் கொடுத்துத் தீர்த்துவிடுவார. “தாமதமாகி இருக்கலாம்; தர மறுக்கப் பட்டதில்லை” (Delayed but not denied) என்று முதல்வர் தனக்கோடி கூறுவார்! ஆசிரியர்களின் அவசரத் தேவைக்கு பகுதிச் சம்பளம் கொடுத்ததும் உண்டு. நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஆட்டைத் தூக்கி மாட்டிலும், மாட்டைத் தூக்கி, ஆட்டிலும் போடுவது போல, வருவாயைக் கல்லூரி விடுதிக்கும் செலவிடுவார்!
பேராசிரியர் த. ஜெயராஜன், எம்.ஏ.,
வரலாற்றுத் துறை,
கா.மு.கல்லூரி.