மூன்று வியப்புகள்!!!

1957- ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள், முதல் நாள், அன்று தான் அதிராம்பட்டினம் மண்ணில் முதல் தடவையாகக் காலை வைத்தேன்! முதல் நாள் அன்றே மூன்று வியப்புக் குறிகள் என் நெஞ்சில் பதிந்தன!கல்லூரி இருக்கும் ஊர் பெரிய நகரமாக, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், நவ நாகரீக வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்று எண்ணி வந்த எனக்குப் புகை வண்டி நிலையத்தைப் பார்த்ததுமே பெரும் அதிர்ச்சி! புகை வண்டி நிலையத்திலிருந்து ஊருக்குள் குதிரை வண்டியில் பட்டணப் பிரவேசம்! மேடு பள்ளங்கள், குண்டு குழிகள் நிறைந்த மண் பாதை! குதிரை வண்டி குளுங்கியும் தூக்கியும் போட்டபடி ஊர்ந்து சென்றது! கடற் கரைத் தெரு தர்கா வைத் தவிர பெரிய கட்டிடம் எதுவும் கண்ணில் படவில்லை! வழி யெல்லாம் புதர்கள், புற்றுகள், முட் செடிகள் மண்டிக் கிடந்தன! பார்வைக்கு எட்டிய வரை கீற்றுக் கொட்டகை வீடுகள், கடைகள்; ஆங்காங்கே சில ஓட்டுக் கூரைகள்! ஊரில் உட் பகுதியில் அங் கொன்றும் இங் கொன்றுமாக மாடிவீடுகள்!வீடுகளில் திறந்த வெளிக் கழிப் பறைகள்! குளிய லறைகள், குடி நீருக்கு மன்னப்பன் குளம்! பேருந்துச் சத்தம் எப்போதாவது கேட்கும்! மயிலாடு துறை மார்க்கத்தில் இரண்டு புகை வண்டிகள்! கூட்டமே இருக்காது! படுத்துக் கொண்டு போகலாம்! மாலை ஆறு மணி ஆகிவிட்டால், வெளியூர்த் தொடர்புகள் அத்தனையும் அறுந்து போகும்!எனக்கு ஏற்பட்ட முதல் வியப்பு, இந்தக் குக்கிராமத்தில் ஒரு கல்லூரி!?முதல் நாள் நான் கண்டது, அதிரையின் புறத் தோற்றத்தை! பழகப் பழக அதன் அகத் தோற்றமும் பழம் பெருமையும் புலனாயிற்று! அதிராம்பட்டினம், அதிவீரராம பாண்டியன் ஆண்ட ஊர்! அதி மதுர கவி அண்ணாவியார் பிறந்த மண்! செல்லி யம்மன் காவல் புரியும் செல்லியம் பதி! தியாகி இப்ராகீம் போன்ற தன்னலமற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிறப்பிடம்! இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய சன் மார்க்கபுரி! பள்ளி வாசல்களும் கோவில்களும் மனிதப் புனிதர்கள் அடங்கிய தர்காக்களும் மிகுந்த புனித ஊர்! திரை கடலோடியும் திரவியம் தேடிய மரைக்காயர்களின் குடி யிருப்புக்களைக் கொண்ட துறை முகப் பட்டினம்!.அன்றைய இஸ்லாமிய ஆடவர் பெண்டிர், சிறியோர், முதியோ ரிடமிருந்து நான் கண்ட இறைப் பற்று, ஆன்மீக உணர்வு, ஆச்சாரம், அறச் செயல்கள், ஒழுக்க சீலங்கள், அதிராம்பட்டினம் இரண்டாவது மக்கா என்று போற்றப் பட்டது சரிதான் என்பதை நிலை நாட்டின! மொத்தத்தில் நான் புகுந்தபோது அதிராம்பட்டினம், பூம்புகார் மாதிரி ஒரு வாழ்ந்து கெட்ட ஊர்!கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே யல்லவா? இரண்டு கடும் புயல்கள் ஊரைச் சூரை யாடி யிருந்த போதிலும், மக்களிடம் விருந் தோம்பும் பண்பு சிறிதும் குறைய வில்லை! அப்போ தெல்லாம் அதிரை மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, ”பசியாரினீர்களா” என்று நல்ல தமிழில் விசாரித்து விட்டுத்தான் தொடந்து பேசுவார்கள்! வயிற்றுக்கு வஞ்சகம் இல்லாமல் தாங்களும் உண்டு, பிறரையும் ”உண்ணீர்”, “உண்ணீர்” என்று உபசரிப் பார்கள்! வசதி யற்றோர் வீடுகளில் கூட வட்டி லப்பம், கடற் பாசி, ரொட்டி, இடி யாப்பம், முர்த்தபா, முட்டைப் புரோட்டா, அடுக்கு பிரியாணி, ஆட்டுக் கறி, கோழிக் கறி, குருவிக் கறி, முட்டை மீன், பாயாசம், பேரீச்சம் பழ இனிப்பு, என்று பரி மாறுவார்கள்! புத்துருக்கு நெய், தேங்கைப்பால், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, உலர்ந்த திராட்சை, போன்ற விலை யுயர்ந்த சத்தான பொருள்களைப் போட்டுச் சமைப்பார்கள்! சாம்பாரில் கூட, கூனி, ராட்டு, என்று அழைக்கப்படும் இறால் மீனைக் கிள்ளிப் போட்டிருப்பர்கள்! கறித் துண்டு ஒவ் வொன்றும் தேங்கா யளவு பெரிதா யிருக்கும்! இருட்டும் வேளை, ரமளான் நோன்பை முறிக்கும் போது, குடிக்கும் கஞ்சியில் தலைக் கறி, கால் கறி, முந்திரிப் பருப்பு, வெள்ளைப் பூண்டு, திரண்டு கிடக்கும்! ரம்ஜான், பக்ரீத் பெரு நாட்களில் எந்த வீட்டு அழைப்பை ஏற்பது என்று திணறுவோம்! நாம் பேச முடியாத வீடுகளி லிருந்து சாப்பாட்டு அடுக்கு நிறையப் பேருண்டிகள் வீடு தேடி வரும்! உண்டும், விருந் தோம்பியுமே பல குடும்பங்கள் நொடித்துப் போ யிருக்கக் கூடும்!பழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்துவிட்டேன்! மன்னியுங்கள்! மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம்! (தொடரும்)பேராசிரியர் த. ஜெயராஜன், எம்.ஏ.,வரலாற்றுத் துறை,கா.மு.கல்லூரி.

மூன்று வியப்புகள்!!!
Linkup
1957- ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள், முதல் நாள், அன்று தான் அதிராம்பட்டினம் மண்ணில் முதல் தடவையாகக் காலை வைத்தேன்! முதல் நாள் அன்றே மூன்று வியப்புக் குறிகள் என் நெஞ்சில் பதிந்தன!


கல்லூரி இருக்கும் ஊர் பெரிய நகரமாக, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், நவ நாகரீக வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்று எண்ணி வந்த எனக்குப் புகை வண்டி நிலையத்தைப் பார்த்ததுமே பெரும் அதிர்ச்சி! புகை வண்டி நிலையத்திலிருந்து ஊருக்குள் குதிரை வண்டியில் பட்டணப் பிரவேசம்! மேடு பள்ளங்கள், குண்டு குழிகள் நிறைந்த மண் பாதை! குதிரை வண்டி குளுங்கியும் தூக்கியும் போட்டபடி ஊர்ந்து சென்றது! கடற் கரைத் தெரு தர்கா வைத் தவிர பெரிய கட்டிடம் எதுவும் கண்ணில் படவில்லை! வழி யெல்லாம் புதர்கள், புற்றுகள், முட் செடிகள் மண்டிக் கிடந்தன! பார்வைக்கு எட்டிய வரை கீற்றுக் கொட்டகை வீடுகள், கடைகள்; ஆங்காங்கே சில ஓட்டுக் கூரைகள்! ஊரில் உட் பகுதியில் அங் கொன்றும் இங் கொன்றுமாக மாடிவீடுகள்!


வீடுகளில் திறந்த வெளிக் கழிப் பறைகள்! குளிய லறைகள், குடி நீருக்கு மன்னப்பன் குளம்! பேருந்துச் சத்தம் எப்போதாவது கேட்கும்! மயிலாடு துறை மார்க்கத்தில் இரண்டு புகை வண்டிகள்! கூட்டமே இருக்காது! படுத்துக் கொண்டு போகலாம்! மாலை ஆறு மணி ஆகிவிட்டால், வெளியூர்த் தொடர்புகள் அத்தனையும் அறுந்து போகும்!

எனக்கு ஏற்பட்ட முதல் வியப்பு, இந்தக் குக்கிராமத்தில் ஒரு கல்லூரி!?

முதல் நாள் நான் கண்டது, அதிரையின் புறத் தோற்றத்தை! பழகப் பழக அதன் அகத் தோற்றமும் பழம் பெருமையும் புலனாயிற்று! அதிராம்பட்டினம், அதிவீரராம பாண்டியன் ஆண்ட ஊர்! அதி மதுர கவி அண்ணாவியார் பிறந்த மண்! செல்லி யம்மன் காவல் புரியும் செல்லியம் பதி! தியாகி இப்ராகீம் போன்ற தன்னலமற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிறப்பிடம்! இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய சன் மார்க்கபுரி! பள்ளி வாசல்களும் கோவில்களும் மனிதப் புனிதர்கள் அடங்கிய தர்காக்களும் மிகுந்த புனித ஊர்! திரை கடலோடியும் திரவியம் தேடிய மரைக்காயர்களின் குடி யிருப்புக்களைக் கொண்ட துறை முகப் பட்டினம்!.

அன்றைய இஸ்லாமிய ஆடவர் பெண்டிர், சிறியோர், முதியோ ரிடமிருந்து நான் கண்ட இறைப் பற்று, ஆன்மீக உணர்வு, ஆச்சாரம், அறச் செயல்கள், ஒழுக்க சீலங்கள், அதிராம்பட்டினம் இரண்டாவது மக்கா என்று போற்றப் பட்டது சரிதான் என்பதை நிலை நாட்டின! மொத்தத்தில் நான் புகுந்தபோது அதிராம்பட்டினம், பூம்புகார் மாதிரி ஒரு வாழ்ந்து கெட்ட ஊர்!

கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே யல்லவா? இரண்டு கடும் புயல்கள் ஊரைச் சூரை யாடி யிருந்த போதிலும், மக்களிடம் விருந் தோம்பும் பண்பு சிறிதும் குறைய வில்லை! அப்போ தெல்லாம் அதிரை மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, ”பசியாரினீர்களா” என்று நல்ல தமிழில் விசாரித்து விட்டுத்தான் தொடந்து பேசுவார்கள்! வயிற்றுக்கு வஞ்சகம் இல்லாமல் தாங்களும் உண்டு, பிறரையும் ”உண்ணீர்”, “உண்ணீர்” என்று உபசரிப் பார்கள்! 


வசதி யற்றோர் வீடுகளில் கூட வட்டி லப்பம், கடற் பாசி, ரொட்டி, இடி யாப்பம், முர்த்தபா, முட்டைப் புரோட்டா, அடுக்கு பிரியாணி, ஆட்டுக் கறி, கோழிக் கறி, குருவிக் கறி, முட்டை மீன், பாயாசம், பேரீச்சம் பழ இனிப்பு, என்று பரி மாறுவார்கள்! புத்துருக்கு நெய், தேங்கைப்பால், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, உலர்ந்த திராட்சை, போன்ற விலை யுயர்ந்த சத்தான பொருள்களைப் போட்டுச் சமைப்பார்கள்! சாம்பாரில் கூட, கூனி, ராட்டு, என்று அழைக்கப்படும் இறால் மீனைக் கிள்ளிப் போட்டிருப்பர்கள்! கறித் துண்டு ஒவ் வொன்றும் தேங்கா யளவு பெரிதா யிருக்கும்! இருட்டும் வேளை, ரமளான் நோன்பை முறிக்கும் போது, குடிக்கும் கஞ்சியில் தலைக் கறி, கால் கறி, முந்திரிப் பருப்பு, வெள்ளைப் பூண்டு, திரண்டு கிடக்கும்! ரம்ஜான், பக்ரீத் பெரு நாட்களில் எந்த வீட்டு அழைப்பை ஏற்பது என்று திணறுவோம்! நாம் பேச முடியாத வீடுகளி லிருந்து சாப்பாட்டு அடுக்கு நிறையப் பேருண்டிகள் வீடு தேடி வரும்! உண்டும், விருந் தோம்பியுமே பல குடும்பங்கள் நொடித்துப் போ யிருக்கக் கூடும்!

பழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்துவிட்டேன்! மன்னியுங்கள்! மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம்!

(தொடரும்)

பேராசிரியர் த. ஜெயராஜன், எம்.ஏ.,
வரலாற்றுத் துறை,
கா.மு.கல்லூரி.